கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் - நாடகம்
இந்த நாடகத்தை notionpress.com வெளியிட்டுள்ளது. இதன் ஆசிரியர் ஹென்ரிக் இப்சன், தமிழாக்கம் இ. தியாகலிங்கம்.
'கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் என்ற இந்த நாடகம் ஹென்ரிக் இப்சனால் 1858 இல் எழுதப்பட்டுக் கிட்டத்தட்ட 200 வருடங்கள் சென்றுவிட்டன. இருந்தும் அதன் வீரியம் குன்றாது இருப்பது அதிசயமூட்டுகிறது. துருவத்தின் பாரதம் இந்த நாடகத்தில் கொப்பளிக்கிறது.' என்று இதைத் தமிழாக்கம் செய்தவரான எழுத்தாளர் இ. தியாகலிங்கம் குறிப்பிட்டுள்ளார். அது ஏற்றுக்கொள்ளக்கூடிய கணிப்பே. இவரது படைப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
என்ரிக் இப்சன் (மார்ச் 20, 1828 - மே 23, 1906) நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர். நோர்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும், கவிஞரும் ஆவார். ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர். 1879 ஆம் ஆண்டில் ஒரு பொம்மைவீடு என்ற நாடகத்தின் மூலம் இப்சன் தனது முக்கிய சர்வதேச கவனத்தைப் பெற்றார், மேலும் அவர் முக்கிய நோர்வே எழுத்தாளராகவும் இலக்கியத்திற்கான உலகளாவிய பெயராகவும் இருந்து வருகிறார். அவர் நவீன, யதார்த்த நாடகத்தின் முன்னோடியாக இருந்தார், ஆனால் லட்சிய காதல் பாடல்-கவி நாடகங்களான பிராண்ட் (1866) மற்றும் பீர் ஜின்ட் (1867) ஆகியவையும் அவரது முக்கிய படைப்புகளில் சிலவாகும்.
இப்சனின் நாடகங்கள் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நடத்தப்படுகின்றன. நாடக உத்தியும், பொருளும், கலகலப்பான கதாபாத்திரங்களும்தான் அவர் இன்றும் முக்கியமானவராகவும், பிரபலமானவராகவும் இருக்க காரணம். இப்சன் ஒரு வியத்தகு தொழில்நுட்ப கலைஞராக இருந்தார், மேலும் ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கும் வகையில் நாடகங்களை அமைத்தார். பல நாடகங்கள் உண்மையைத் தேடும் நபர்கள், காலத்தின் மேலோட்டமான பொய்மையை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை கருப்பொருளாக்குகிறார்.
நான்கு காட்சிகளில் இந்தநாடகம் விரிகிறது.
நபர்கள்: ஓர்நூல்வ் - பியூர்ட்டில் இருந்து ஐஸ்லாந்தின் நில ஜாமீன்.
பியூர்ட் (செங்குத்தான மலைகளுக்கு இடையில் ய-னாவின் அரைப் பகுதி போல, கடலில் வாயைத் திறப்பதாய், பனி யுகத்தில் உருவாக்கப்பட்ட, ஒரு நீண்ட கடல் பகுதி, குறிப்பாக இது நோர்வேயில் காணப்படுகிறது. இதைப் பியூர்ட் என்பார்கள்.)
சிகூர்ட் கின் ஸ்தர்க்க, கடல் ராஜா.
குன்னார் ஹெர்ஸெ, கெல்கலாண்டின் பணக்கார விவசாயி.
ஓர்நூல்வின் இளைய மகன் தூரோல்ப்வ்.
ஓர்நூல்வின் மகள் டாக்னி.
அவரது வளர்ப்பு மகள் யோர்டீஸ்.
கோர பொண்ட ஒரு கெல்கலாண்டான்.
குன்னாரின் நான்கு வயது மகன் ஏகில்.
ஓர்நூல்வின் ஆறு மூத்த மகன்கள்.
ஓர்நூல்வின் மற்றும் சிகூர்ட்டின் ஆட்கள்.
விருந்தினர்கள், பணியாட்கள், வடமுனை ஆலா, அமைதியற்ற ஆட்கள் முதலியன.
(ஏரிக் புளாட்ஒக்ஸின் காலத்தில் இந்த காட்சி வடநோர்வேயில் கெல்கலாண்டில் உள்ள குன்னாரின் பண்ணையிலும், அருகிலும் நடைபெறுகிறது.)
காதல், துரோகம், மோதல் என்று விறுவிறுப்போடு நகரும் இந்த நாடகம் சோகத்தில் முடிகிறது. படைப்பின் இறுக்கத்தை, தொடர்பை, அழகியலை இதை வாசிக்கும்போது அறிந்து கொள்ளலாம்.
தமிழாக்கம் சிறப்பாக அமைந்திருக்கிறது. கூடியமட்டும் அழகான தமிழ் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு எழுத்தாளர் இ. தியாகலிங்கத்திற்குப் பாராட்டுக்கள்.

Comments
Post a Comment