வே - நாவல்
வே - என்பது உளவு, மறை என்றும் பொருட்படும்.இந்த நாவலை notionpress.com
வெளியிட்டுள்ளது. இதன் ஆசிரியர் இ. தியாகலிங்கம், பல நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் எனக் குறிப்பிடத்தக்க அளவு படைப்புக்களை எழுதியிருக்கிறார். தொடர்ந்தும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் முனைப்பாக இயங்கும் ஒரு படைப்பாளி. அண்மையில் சில சிறுகதைகளை கணையாழி இதழிலும் பார்க்க முடிந்தது. 1994-இல் தனது முதலாவது நாவலைப் பிரசுரித்து இருந்தாலும் தமிழ் விமர்சன உலகில் செ. யோகராசா க. பூரணச்சந்திரன் லெ. முருகபூபதி என்கின்ற ஒரு சிலரின் விமர்சனத்தைத் தவிர இவரைப்பற்றிய விமர்சனங்களைக் காணக் கிடைக்கவில்லை.
வே புதினமா, அல்லது நாவலா என்கின்ற ஒரு தயக்கம் என்னிடம் உண்டு. ஈழப் பிரச்சனை பற்றி பலரும் எழுதிய பின்பு இதை எழுதுவது புதினமா என்கின்ற கேள்வியை எழுப்புகிறது. இருந்தாலும் அவர் எடுத்துக்கொண்ட தளமும், கருவும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.
இவர் ஈழத்தைவிட்டுப் பல சகாப்தங்களுக்கு முன்பே புலம் பெயர்ந்துவிட்டார். அதனால் இந்த நாவலில் நேரடி அனுபவங்களைவிடக் கற்பனைகள் மிகக் கலந்திருக்கின்றன என்பது வெளிப்படை. ஈழப் போர் சம்பந்தமாகப் பல நாவல்கள் வந்துவிட்டன. அவற்றில் பல ஈழப் போருக்குச் சார்பாக அல்லது எதிராக ஒலிக்கும். இந்த நாவல் அதற்கு மாறாக ஈழப்போர் என்பதோ, இன விடுதலைப் போராட்டம் என்பதோ உரிமைகளைப்பெறச் சரியான அணுகுமுறையா என்கின்ற புதியதொரு கேள்வியைத் துணிந்து கேட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது.
கதையில் உண்மை வரலாறும் கற்பனைகளும் கலந்திருக்கின்றன. துவக்கத்தில் குழப்பத்தைத் தந்தாலும் நாவலை முடிக்கும் போது அது தெளிவாகி விடுகிறது. போராளிகளால் பழிவாங்கப்படும் காவல் அதிகாரி. அதற்காகப் பழிவாங்கப் புறப்பட்ட அவரின் உறவுப் பெண். இலங்கை அரசின் உளவுப் பெண்ணாக மாறி அவர்களுக்காக வேலை செய்கிறாள். பின்னர் நோர்வேயில் இயக்கப் போராளியாக இருந்தவனும், இப்போதும் அந்தக் கருத்து மாறாது இருப்பவனுமான சோதீஸ்சோடு காதல் ஏற்படுகிறது. அவள் உளவாளி என்று தெரிந்ததும் அவன் அவளைக் கொலை செய்ய முயல்கின்றான். போராளிகளை 'தேடப்பட்ட குற்றவாளிகள்' என்பது அந்தப் பெண்ணின் பார்வையில் சரியாக இருந்தாலும் மற்றவர்களால் அது ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியே.
ஆசிரியரின் மொழி இடத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டிருக்கிறது. நோர்வே பெண்மணியோடு கதைப்பது ஒருவிதம் என்றால் நாயகியும் நாயகனும் கதைப்பது இன்னொரு விதமாக இருக்கிறது. அத்தோடு நாவலில் கலப்புச் சொற்களைக் குறைப்பதற்கு அதிக கவனம் எடுத்திருப்பது தமிழிற்கு வளமான ஒன்றே. இறுதியில் அதற்குக் கலைச் சொற்கள் வேறு ஆசிரியர் கொடுத்திருக்கிறார். அத்தோடு நாவலாசிரியரின் குளிர்கால நாட்டு அழகியல் வர்ணனை ஐரோப்பிய நாவல்களை வாசிப்பது போல இரசிக்கக்கூடிய ஒன்றாகும்.
இந்த நாவல் சொல்லப் புறப்பட்ட விடயம் இப்போது விவாதத்திற்கு உரியதே. ஈழப்போராட்டம் மௌனிக்கப்பட்டு அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லாது போன நிலையில், நடந்தவை சரிதானா என்கின்ற கேள்வி எழுவது இயல்பு. அதையே இந்த நாவல் கேட்கிறது. தமிழரசுக்கட்சி, மற்றும் கூட்டணி அரசியலுக்கு எதிரான அரசியல் ஒன்று இருந்தது. அது அரசுடன் ஒத்துழைத்து எமது உரிமைகளைக் காக்க முயன்றது. இன்றைய சூழலில் அவர்கள் கூறியது சரியா என்கின்ற எண்ணம் ஏற்படத்தான் செய்கிறது.
இந்த நாவல் எந்த விடைகளையும் தராவிட்டாலும் ஒரு விவாதத்திற்கான ஆரம்பம் என்பதால் வாசிக்கபட வேண்டிய நாவல் ஒன்றே.
நாவல் விமர்சனம்

Comments
Post a Comment